×

தமிழ்நாட்டில் ரூ.15,000 கோடி முதலீடு செய்யும் ஹூண்டாய் : அடுத்த 10 ஆண்டுகளில் 36.4 லட்சம் மின்சார கார்களை உற்பத்தி செய்ய முடிவு!!

சென்னை : பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய் தமிழ்நாட்டில் மேலும் 15,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றது முதல் தொழில் முதலீடுகளை ஏற்பதில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் தென் கொரியாவைச் சேர்ந்த பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் தமிழ்நாட்டில் தனது முதலீட்டை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி மின்சார கார் அது சார்ந்த கட்டுமானம் மற்றும் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் கார்களை உற்பத்தி செய்வதற்காக அடுத்த 10 ஆண்டுகளில் 15,000 கோடி ரூபாய் முதல் 20,000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய உள்ளது.

இது தொடர்பான ஒப்பந்தமானது நாளை கையெழுத்தாக இருப்பதாக தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் ஸ்ரீபெரும்புதூரில் ஹூண்டாய் நிறுவனம் மிகப்பெரிய ஆலையை நடத்தி வருகிறது.இந்த ஆலையில் இதுவரை 32,824 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ள நிறுவனம், 7 லட்சத்து 40 ஆயிரம் கார்களை உற்பத்தி செய்ய தீவிரம் காட்டி வருகிறது. இதன் பயனாக கடந்த 2022ம் ஆண்டு வரை மட்டும் ஆலையின் ஒட்டுமொத்த கார் உற்பத்தி 7,00,811 கார்களாக உள்ளது. இது கடந்த 2021ம் ஆண்டு விற்பனையை காட்டிலும் 10.3% அதிகமாகும்.

அதே வேளையில் ஸ்ரீபெரம்பத்தூர் ஆலையின் 2022ம் ஆண்டு வரையிலான ஏற்றுமதியும் 1,48,300 ஆக உயர்ந்துள்ளது. தற்போது தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களை தயாரிக்க திட்டமிட்டு இருக்கும் ஹூண்டாய் அடுத்த 10 ஆண்டுகளில் 36.4 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளது. அதுவும் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப 31 வகையான மின்சார கார்களை அறிமுகம் செய்த மின்சார கார் உற்பத்தி நிறுவனங்கள் வரிசையில் முதல் 3 இடத்தை பிடிக்கவும் முனைப்பு காட்டியுள்ளது. ஹூண்டாய் நிறுவனத்தின் இந்த முயற்சியால் வேலைவாய்ப்பு பெருகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

The post தமிழ்நாட்டில் ரூ.15,000 கோடி முதலீடு செய்யும் ஹூண்டாய் : அடுத்த 10 ஆண்டுகளில் 36.4 லட்சம் மின்சார கார்களை உற்பத்தி செய்ய முடிவு!! appeared first on Dinakaran.

Tags : Hyundai ,Tamil Nadu ,Chennai ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு அரசு அறிவிப்பு: அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி அறிமுகம்